Sunday, January 26, 2014

உன் வாழ்க்கை உன் கையில்!

அனைவருக்கும் வணக்கம்!

எனது வலைப்பூக்களில் முதலாவதாக பதியப் படும் விஷயம் எனது இன்றைய நிலைக்கு காரணமான ஒன்றாக இருக்க வேண்டுமென நம்பினேன். 
நாம் நம்புகிற / செயல்படுத்துகிற சில விசயங்கள் சில நேரங்களில் திரைப்படத்தின் பெயர் / பாடல் / வசனங்களில், மேலும் அழகிய & பொருத்தமான வார்த்தைக் கோர்வையில் வரும் பொழுது நமக்கு மகிழ்ச்சியும் ஆச்சர்யமும் ஏற்படுவதுண்டு. அது போன்ற ஒன்றுதான் சூப்பர் ஸ்டார் படத்தில் வந்த இந்தத் தலைப்பு.

எனக்கு கிடைத்தது போன்ற மனைவி, குழந்தைகள், பெற்றோர், உடன் பிறப்பு, கூட்டுக் குடும்பம், நண்பர்கள், ஆசிரியர்கள், சக தொழிலாளர்கள், அண்டை வீட்டார்,  பள்ளி, கல்லூரி & அலுவலகங்கள் எல்லாம் வேறு எவருக்கேனும் கிடைத்திருந்தால் நிச்சயமாக இன்னும் பல மடங்கு முன்னேற்றம் கண்டிருப்பார் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
இருப்பினும், எனக்குக் கிடைத்த அவ்வளவு நல்ல சூழ்நிலைக்கு மேற்கொண்டு, என்னால் செய்ய முடிந்த ஒரே ஒரு விஷயம் - "உன் வாழ்க்கை உன் கையில்" என்ற நம்பிக்கை மட்டுமே!
இதனை நான் குறிப்பிடக் காரணம் :: எனக்குக் கிடைத்த வரம் போன்ற இந்த வாழ்க்கை கிடைக்கப் பட்ட எவரும் செய்திருக்க வாய்ப்புள்ள ஒன்று - அந்த நல்ல வாழ்க்கையை, வேறெதுவுமே செய்யாமல், சந்தோசமாக வாழ்ந்து அனுபவித்திருப்பது மட்டும்தான். 
நான் அதனைச் செய்யாமல், இப்பொழுது செய்து கொண்டிருக்கும் பல விசயங்களை (அலுவல், வலைப்பூ..) செய்ததால் கிடைத்தவை மிக அதிகம். உதாரணமாக - 
1) பல வித்தியாசமான மனிதர்களை சந்திக்கும் சூழல் 
2) பல நல்ல விசயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்பு 
3) சவாலான பல சோதனைகள எதிர் கொள்ளும் களம் 
4) (நம்மில் பலர் செய்ய முயலும்) அடுத்த சந்ததியினருக்கு இன்னும் சிறந்த வாழ்க்கை 
5) எல்லாவற்றிற்கும் முத்தாய்ப்பாய் - "நான்" என்ன செய்தேன் என்று பார்த்து மகிழ ஓரிரு விஷயங்கள் 

ஒவ்வொரு வருடமும், எனது அப்பா ஒரு நாட்குறிப்பு (diary) எனக்கு வாங்கித் தருவது வழக்கம்.
எனது பாட்டையா(அப்பாவின் அப்பா) மண்ணுலகில் இருந்தவரை, அவரிடம் ஆசிர்வாதம் வாங்கும் விதமாக, வருடத் துவக்கத்தில், அந்த நாட்குறிப்பின் முதல் பக்கத்தில் அவர் கையால் வாழ்த்துச் செய்தி ஒன்றை எழுதி வாங்கி வந்தேன். அவர் தவறாமல்  எழுதிய ஒன்று "தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் நிச்சயம் வெற்றியைப் பெற்றுத் தரும்" என்பதுதான்.

நன்றாக யோசித்துப் பார்த்தால், தன்னம்பிக்கை / விடாமுயற்சி - இவற்றுள் ஏதேனும் ஒன்று இல்லாமல் போயிருந்தாலும் நாட்டில் பல பேர் வெற்றியைச் சுவைத்திருக்க மாட்டார்கள் என்பது நன்கு புலப்படுகிறது.

தன்னம்பிக்கை & விடாமுயற்சியின் காரணமாக விளைந்த நற்பலன்களாக நான் கண்டவற்றுள் சில:
திருச்சி புனித வளனார் (St.Joseph's) கல்லூரியில் 1993-ல் நடந்த சம்பவம். கல்லூரி ஆரம்பித்து சுமார் ஒன்றரை மாத காலகட்டத்திற்குப் பின் வந்து ஒரு மாணவர்  இயற்பியல் இளங்கலை (B.Sc,  Physics) முதலாமாண்டு சேர்ந்தார். நேராக கடைசி பெஞ்ச்சில் சென்று ஐக்கியமானார். அவர் வந்தவுடன் இருந்த முதல் வகுப்பு Mathematical Physics. முதல் கணக்கை விரிவுரையாளர் சொல்லித்  தர ஆரம்பித்தார். ஓரிரு வினாடிகள்  கடந்திருக்கும். வகுப்பறையே திரும்பிப் பார்க்கும் படியாக அவர் முதல் ஆளாக விடையை சொன்னார். விரிவுரையாளர் அப்போதுதான் ஒரு புது மாணவர் அங்கு வந்திருப்பதையே கவனித்தார். ஆங்கிலத்திலேயே அவர் அந்த மாணவரைப்  பற்றி விசாரிக்க, அவர் பதில் சொல்ல முடியாமல்  தள்ளாடியது புரிந்தது. விரிவுரையாளர் அவரை முன் பக்கமாக அழைத்து தமிழிலேயே பேசிவிட்டு, "Tamil medium" ஆ என்றார். ஆம் என்று அவர் ஆமோதிக்க, எங்களுக்கு அவரது அறிவும், ஆங்கில திறன் பிரச்சனையும் புரிந்தது. ஆனால், விரிவுரையாளர் அந்த மாணவரை முன் பெஞ்ச்சில் உட்கார வைத்தபொழுது, எங்கள் எல்லோரையும் விட தனக்கு விஷயம் அதிகம் தெரியும் என்பதை புரிந்து கொண்டார். அந்தத் தன்னம்பிக்கை அவருக்கு செய்து கொடுத்த அபூர்வங்கள் பல. முக்கியமாக அவர் அந்த நிமிடம் முதலாக எங்குமே "யார் Tamil medium" என்று கேட்டால் கையைத் தூக்கியதே கிடையாது. நான் அது பற்றி ஒரு முறை கேட்ட போது சொன்னார் "நான் Tamil medium-னு சொல்ற அந்த ஒரு வினாடி கூட ஆங்கிலத்துல சரளமா பேச முடியும்னு நம்புற என்னோட தன்னம்பிக்கை கொரஞ்சுரக் கூடாதுன்னு!".
நீங்கள் நம்புகிறீர்களோ இல்லையோ, இப்போ வரைக்கும் அவர் பள்ளியில் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்னு நெறையப் பேருக்குத் தெரியாது!
என்னோட நண்பர் ஆதி ஒரு முறை சொன்னார் "நான் திருமங்கலம் school english medium da. எனக்குத் தெரிஞ்சு தமிழ் நாட்ல சென்னைல இங்கிலீஷ் medium படிக்கிறதுதான் வேற. மத்த எல்லா ஊர்லயும் எந்த medium படிச்சாலும் ஒண்ணுதான்னு!". நல்லா யோசிச்சுப் பாத்திங்கன்னா, நகரத்துல படிக்கிற மாணவர்களுக்கு ஒரு தனித் தைரியம் இருக்கும். அந்த சூழல் தர்ற வரம் அது". அது எல்லோருக்கும் கெடைக்கனும்னா, அது அவங்களோட தன்னம்பிக்கையால மட்டும் தான் முடியும்கிறது என்னோட நம்பிக்கை.

அரசூர்  V.R.S. பொறியியல் கல்லூரியில் படிக்கும் பொழுது பார்த்த ஒரு விஷயம் -
என்னோட நண்பர் ஒருத்தர். நல்ல அறிவாளி. எப்பவாவதுதான் படிப்பார். ஆனா, semester கால அட்டவணை (time table) வந்த ஒடனே, அவருக்கும் மட்டும் புரியிற மாதிரி ஒரு ப்ளான் போடுவார். அந்த நாள்ல இருந்து அவரப் பாக்கவே ஆச்சர்யமா இருக்கும். ஒவ்வொரு பரீட்சை முடிஞ்சு வரும்போதும் எவ்ளோ மதிப்பெண் வரும்னு சொல்லுவார். அதிகபட்சம் 5 மதிப்பெண் வித்தியாசம்தான் இருக்கும்! 

Pinnacle Info Solutions-னு ஒரு அலுவலகத்துல வேலை பார்த்தப்போ நடந்தது. நாங்க 7 பேர் ஒரே project-ல வேலை பார்த்தோம். எல்லாரும் 2 - 3 வருஷம் அனுபவம் உள்ள ஆட்கள். ஒரு நாள் Client escalation-னால பெரிய பிரச்சனை. Senior Project Manager (மொத்தக் கம்பெனிக்கும் ஒரே ஒருத்தர்தான்) வந்து பேசுனார். எங்க 7 பேர்ல யாராவது அந்த project-க்கு தலைமை தாங்கணும்னு முடிவு பண்ணுனார். அந்த நபர்தான் பொறுப்புன்னு ஒரு குண்டு வேற. எங்கள்ள ஒரு நண்பர் மட்டும் ஒடனே ஒத்துக்கிட்டார்! எங்க எல்லோருக்கும் திறமைல ஒண்ணும் பெரிய வித்யாசம்லாம் இல்ல. எங்க எல்லாரையும் விட அவர் அந்த கம்பெனிக்குப் புதுசு வேற! 
நம்புறீங்களோ இல்லையோ - அவர் எப்போ வீட்டுக்குப் போறார் / வர்றார் அப்டிங்கறது சத்தியமா எங்க யாருக்குமே தெரியல. ஆனா, அங்க ஆரம்பிச்சது அவரோட graph-ல ஏறுமுகம். இப்போ வரைக்கும் அவர நான் தொடர்ந்து    கவனிச்சுக் கிட்டே வர்றேன். அந்த தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் அவர்கிட்ட மட்டும் இல்ல - dracula கடிச்ச மாதிரி அவரைச் சுத்தி இருக்கிற எல்லாருக்கும் பரவிக்கிட்டே  இருக்கு!

சுருக்கமா சொன்னா - தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் இருந்தா திறமையும் வெற்றியும் தானா வரும் - ஆனா தன்னம்பிக்கையும் விடா முயற்சியும் சேர்ந்து இல்லாத திறமைக்கு வெற்றி கிடைக்காதுன்னு நம்புறேன் - நீங்க?

தங்கள் நேரத்திற்கு நன்றி. தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன். 


நன்றி, வணக்கம்!

2 comments:

  1. good one. good you wrote frm personal experience :)

    ReplyDelete
    Replies
    1. thanks a lot, Prasanna ... yes, trying to capture few things from whatever I've seen / experienced in my life.

      Delete