Saturday, February 8, 2014

நமக்கு மேல இருக்கிற ஒருத்தன்...

அனைவருக்கும் வணக்கம்!

"'உன் வாழ்க்கை உன் கையில்' என்கிற தலைப்பில் போன முறை வலைப்பூ பதிவு செய்து விட்டு, இம்முறை அதற்குத் தலைகீழாக இப்படி ஒரு தலைப்பா" என எனது ஆஸ்திக & நாத்திக நண்பர்கள் கை கோர்த்தபடி புருவம் உயர்த்துவது புரிகிறது. தயவு செய்து தொடர்ந்து வாசிக்கவும்.

நான் வாழ்க்கையில் பார்த்து மட்டுமல்ல, அனுபவித்தும் தெரிந்து கொண்ட மிகச் சிலவற்றுள் ஒன்று - 
நமக்கு எந்த கஷ்டமும் வராமல்  பார்த்துக் கொள்ள, நமது வேலையையும் முடித்து விட வேறு ஒருவர் இருக்கிறார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிற எவரும் கவலைப் படுவதில்லை என்பதுதான்.

எடுத்துக்காட்டாய், நம் அனைவரும் நாள் தோறும் சந்திக்கும் ஒரு சில விசயங்கள்:
1) வீட்டு வேலைகள் எல்லாவற்றையும் (குழந்தைகளையும் சேர்த்து) பார்த்துக் கொள்ளும் மனைவி பெற்ற கணவர்கள் 
2) ஆரோக்கியமான அப்பா அம்மா உடனிருந்து தன்னை நன்றாக பார்த்துக் கொள்ள, வேலைக்குப் போகும் பிள்ளைகள் (ஆண் & பெண், இரு பாலரும்)
3) "நீ எதுக்குமா வீணா அலையுற" என்று சொல்லி, வேலை முடிந்து வரும்போதே வீட்டுக்கு தேவையானவற்றை வாங்கி வந்துவிடுகிற கணவனைப் பெற்ற மனைவியர் 
- இவர்கள் எல்லோருமே மிக மிக ஆசிர்வதிக்கப் பட்டவர்கள். இது அவர்களை விட அந்த வரங்கள் கிடைக்கப் பெறாதவர்களுக்குப் புரியும். 

அப்படிப்பட்ட வரம் வாங்கி வந்தவர்களிடம் பழகிப்பார்த்தால்; அவர்களது சொந்த ஊர், படிப்பு, வேலை, பொருளாதார நிலை, வயது ... இப்படி எல்லா விசயமும் வெவ்வேறாக இருந்தாலும்,  அத்தனையையும் தாண்டி ஒரு மிகப் பெரிய ஒற்றுமையை பார்க்க முடியும். அது - நிம்மதி. 
அவர்களின் பேச்சு, சிரிப்பு, சிந்தனை, வேலைத்திறன், சுறுசுறுப்பு, நடை - இப்படி பல வகைகளில் அந்த நிம்மதி வெளிப்படுவதை பார்க்க முடியும்.

என்னுடைய நண்பர் வாழ்வில் நடந்த ஒன்று - 
அவருக்கு திடீரென்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழ்நிலை. நாங்கள் நண்பர்கள் சிலர் அவரைப் பார்க்கப் போயிருந்தோம். மருத்துவமனை நுழைவாசலில் நண்பரின் தந்தையார் நின்று கொண்டிருந்தார். எங்களது கல்லூரிக் காலம் தொட்டே, அவருடைய தந்தையாரையும் எங்களுக்கு  நன்றாகத் தெரியும். அடுத்தவர்களுக்கு தைரியமூட்டக் கூடிய ஒரு நபர். அவரே உடைந்து போயிருந்தார். எங்களைப் பார்த்ததனாலோ என்னவோ, முகத்தை எப்போதும் போல வைத்துக் கொண்டார்! அவர் சொல்லிய விசயங்களை வைத்துப் பார்த்தால், மிகப் பெரிய சிகிச்சை என்பது கண்கூடாகத் தெரிந்தது.  பேசிக் கொண்டே நண்பரை அனுமதித்திருந்த அறைக்கு போனோம். அவர் வீட்டில் எல்லோருமே பயங்கர அதிர்ச்சியில் இருந்தனர், ஆனால் - ஆச்சர்யமாய், நண்பர் மட்டும் எந்த சலனமும் இல்லாமல், அரட்டை அடித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த ஒரு மருத்துவர் மூலம் செய்யப் படப்போகும் operation பற்றித் தெரிய, எங்களுக்கெல்லாம் ரத்த அழுத்தம் (BP) எகிறியது. கொஞ்ச நேரத்தில், நாங்கள் இருக்கும் போதே, நண்பருக்கு BP அளந்தார்கள். அந்த செவிலி சின்னதாய் ஒரு புன்னகையுடன் "எப்பவும் போல நார்மல்தான்" என்று சொல்லி விட்டுச் சென்றார்.
எங்கள் எல்லோருக்குமே ஆச்சர்யப்படாமல் இருக்க முடியவில்லை. அப்போது எதுவும் காட்டிக் கொள்ளாமல் வந்து விட்டோம். அறுவை சிகிச்சை நல்ல படியாக முடிந்து அவர் முற்றிலுமாக குணமான பின், ஒரு நாள் கேட்டே விட்டேன் "டேய், உனக்கு அந்த நேரத்துல பயமாவே இல்லையாடா" என்று. சிரித்துக் கொண்டே சொன்னார் "எனக்கு அந்த ஆபரேசன் ரொம்ப பெருசுனு தெரியும்டா. என்னோட bank details, savings, investment முதற்கொண்டு எல்லாத்தையும் என் வீட்ல குடுத்துட்டு; office விசயத்தக் கூட போயி hand over பண்ணிட்டுத்தான் admit ஆனேன். எனக்கு என்ன வேணும்னாலும் நடக்கும்கிற அளவுக்கு அது பெரிய ஆபரேசன்னும் தெரியும்" எனச் சொல்ல, ஏதோ காரணத்தால் அந்த "எப்பவும் போல நார்மல்தான்" வசனம் நினைவுக்கு வந்தது. அதையும் பற்றிக் கேட்க, நண்பர் சிரித்த படியே சொன்னார் "எனக்கு எதுவும் ஆகாம, எங்க அப்பா பாத்துப்பர்னு நம்பிக்கை இருந்துச்து, இப்பவும் இருக்கு. எப்பவும் இருக்கு. அப்புறம் எப்டிடா BP-ல வித்தியாசம் வரும்" எனச் சொல்ல, அன்றைக்கு அவரது அப்பா முகத்தை எப்போதும் போல வைத்தது எங்களைப் பார்த்ததற்காக இல்லை என்பது நன்றாக உரைத்தது. அவரது  உறவினர்கள் 3 பேர் மருத்துவர்கள். அவர்கள் எல்லோரும் சேர்ந்து முடிவெடுத்த விசயங்களை (அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவமனை, மருத்துவ முறை...) அதற்கு மேலும்  அடுக்க, அப்போது புரிந்தது - "நமக்கு மேல ஒருத்தன்" என்பதன் அர்த்தம்.

இன்னொரு விஷயம் -
மற்றொரு நண்பர். அவரது பெற்றோர், உறவினர் ஒருவருக்கு உதவி செய்ய ஜாமீன் கையெழுத்துப்  போட்டு, அந்த உறவினர் பணத்தைக் கட்ட முடியாமல் போக, இவர் சிறுக சிறுக அடைத்துக் கொண்டிருந்த காலம். அந்த சூழலில், மன அமைதிக்காக அவர் ஒரு தியான நிலையத்துக்கு செல்வது வழக்கம். அங்கு ஒருவரை குருவாக மதிக்க ஆரம்பித்தார். அதற்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு, நானும் அவரும் ஒரு நாள் அந்த குருவைப் பற்றி பேச நேர்ந்தது. எனது நண்பர் எந்த முடிவையும் அவரது குருவின் யோசனைப் படியே செய்து வருகிறார் என்பது நன்கு புரிந்தது. படித்துக் கொண்டிருக்கும் சிலரது சிந்தனைக் குதிரையைக் கட்டிப் போட - அந்த குரு பிரபலமானவர்களுள் ஒருவர் அல்ல + என் நண்பர் எந்த காணிக்கை / கட்டணம் அந்த குருவுக்கு கொடுத்தது கிடையாது! (அதனால்தான் பிரபலம் ஆகவில்லை / ஆக முயற்சிக்கவில்லை?!). அந்த குரு சொன்ன ஆலொசனைப் படி செய்த எல்லாமே, நண்பருக்கு 100% நல்ல படியாக நடந்திருந்தது. அப்போதும் புரிந்தது - "நமக்கு மேல ஒருத்தன்" என்பதன் அர்த்தம்.

மற்றுமொரு நிகழ்ச்சி -
எனது தோழி ஒருவர் வேலை செய்யும் நிறுவனத்தில் நடந்தது இது. அவர் மிகவும் திறமைசாலி. ஆனால், ஒரு குறிப்பிட்ட கால கட்டத்தில் அவர் அந்த நிறுவனத்தை விட்டு வெளியேறிட முடிவு எடுத்தார். எங்கள் நண்பர்கள் சிலரிடம் அது குறித்து ஆலோசித்தார். அந்த முடிவைப் பற்றி எனக்கு ஏதும் பெரிய ஆச்சர்யம் இல்லாத போதிலும், அவர் சொன்ன காரணம் என்னை பேச வைத்தது. விஷயம் இதுதான் -- அவரது மேலதிகாரி இவருக்கு கொடுத்த வேலையின் அளவு மிக அதிகம். நாங்கள் முன்பொரு நிறுவனத்தில் வேலை செய்த காரணத்தால், எனக்கு அவரது வேலை செய்யும் திறன் & வேகம் தெரியும்.  எனவே, அது மட்டும் காரணம் இல்லை எனத் தோன்றியது. ஒரு பெண்ணுக்கு வேலை செய்யும் இடத்தில் எப்படிப் பட்ட பிரச்சனையெல்லாம் வரலாம் என கொஞ்சம் தெரிந்த காரணத்தால், அதைத் தாண்டி வேறு எதுவும் கேட்காமல், ஒரு குறிப்பிட்ட நபருக்காக வேலை செய்யும்  அலுவலகத்தில் இருந்து வெளியேறுவது தீர்வல்ல என்றும், புதிதாகப் போய்ச் சேர வேண்டிய நிறுவனத்தில் எப்படிப் பட்ட மனிதர்கள் / பிரச்சனைகள் இருக்கும் என்றே தெரியாது என்றும் சொல்லி அனுப்பி வைத்தோம். அதன் பின், சில மாதங்கள் அவரைத் தொடர்பு  கொள்ளும் சந்தர்ப்பம் அமையவில்லை. மீண்டும் ஒரு நாள், வேறொரு விசேசத்தில் நண்பர்கள் ஒன்று சேரும் வாய்ப்பு கிடைத்தது. அப்பொழுது, அந்த தோழி அதே பழைய நிறுவனத்தில் மிக சந்தோசமாக இருப்பதாகக் கூறினார்! வேறொரு, project-க்கு மாறி; அங்கு சக தொழிலாளிகளை மதித்து, மரியாதையுடன் பழகி, பாராட்டி, செய்யும் வேலைக்கு அங்கீகாரம் பெற்றுத் தருகிற மேலதிகாரி இருப்பதாக கூறினார். அப்போதும் புரிந்தது - "நமக்கு மேல ஒருத்தன்" என்பதன் அர்த்தம். 

நிஜத்திலிருந்து விலகாத ஒரு நிழல் - "புன்னகை தேசம்" என்று ஒரு திரைப்படம். அதில் ஒரு வசனம் உண்டு - "எல்லோரும் நல்லவங்களப் பாக்கனும்னு ஆசைப்படுறாங்க  .. ஆனா, யாருமே  நல்லவங்களா இருக்கணும்னு நெனைக்கிறதில்ல"-னு. 

நிச்சயமாக சொல்கிறேன் - அது மறுக்க முடியாத உண்மை. 

நமக்கு மேல இருக்கிற ஒருத்தன் நம்மள நல்லா பாத்துக்கணும்னு நாம எல்லாருமே எதிர் பார்க்கிறோம் - வீடு, அலுவலகம் இப்படி எதுவாக இருந்தாலும். ஆனா, நாம அந்த மாதிரி இருக்கணும்னு எப்போவாவது நெனச்சுருக்கோமா? 

  • ஏற்கனவே அப்படி நினைக்கிறவங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். 
  • அந்த மாதிரி நினைக்கிறது மட்டுமின்றி, அதன்படி வாழ்வோருக்கு எனது தலையாய வணக்கங்கள். 
  • இது வரைக்கும் அப்படி நினைக்காத சக மனிதர்களே, இன்று முதல் அப்படி நினைத்து அதன் படி வாழ முயற்சி செய்வோம் - 

"வீரம்" படத்துல நாயகன் சொல்றது ஞாபகம் வருது - "நம்ம கூட இருக்கறவங்கள நாம நல்ல பாத்துக்கிட்டா, நமக்கு மேல இருக்கறவவன் நம்மல நல்லாப் பாத்துக்குவான்"! 
நான் நம்புறேன் "நம்ம கூட இருக்கறவங்கள நாம நல்ல பாத்துக்கிட்டா, நமக்கே நம்மல ரொம்பப் பிடிக்கும்" - நம்புவோம்! முயற்சி செய்வோம்!! முடிந்த வரையல்ல, முடிக்கும் வரை!!!

தங்கள் நேரத்திற்கு நன்றி. தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.