Friday, March 7, 2014

காதல்

அனைவருக்கும் வணக்கம்!

"காதல்" - ஒரே வார்த்தை உலகிலுள்ள அனைவரையும் ஏதோ வகையில் பாதிக்க முடியும் என்றால், அது இதுவாகத்தான் இருக்கும்! 
அதிலும் குறிப்பாக ஒவ்வொருவருக்குள்ளும் வேறு வேறு மாதிரி உணர்ச்சிகளை உண்டாக்குகிறது என்பது இன்னுமொரு ஆச்சர்யம்!!

தன் பிள்ளை இதில் மாட்டிக் கொள்ளக் கூடாது எனப் பெற்றோரும், தன் பரம்பரையில் யாரேனும் இதைச் செய்தால் அன்றோடு தங்கள் பாரம்பரியமே அழிந்து விடுமென தாத்தா-பாட்டியரும்,  "நம்மாளுக வேறவைங்க  வீட்டுக்குப் போனா நம்ம சாதிக்கு பெரிய அவமானம்டா" என தலைவர்களும் ஒரு புறம் இருக்க ....

தமது வேலையை மாய்ஞ்சு மாய்ஞ்சு உலகத்தின்  இன்னோரு பக்கத்தில் இந்தியர்கள் பார்த்துக் கொண்டிருக்க, நிம்மதியாக நேரம் செலவழிக்கும் அமெரிக்கர்கள் போல; எந்த பாதிப்பும் இல்லாமல்; 
"உலகத்தைவிட உன்னையும் - உன்னை விட நம் காதலையும் நேசிக்கிறேனென்" என காதல் வயப்பட்டோரும்;
என் மேல் மட்டும் எனது வாழ்க்கைத் துணை கொள்ளை கொள்ளையாய் காதல் கொள்ள வேண்டுமென திருமணமானொரும்; இன்னோரு புறத்தில் இயங்கிக் கொண்டிருக்க ...


சமுதாயத்தில் இருப்பதைத்தான் நாங்கள் எதிரொலிக்கிறோம் என்று சொல்லி, முடிந்த அளவு வேறு எதையும் பற்றி யோசிக்காமல் / யோசிக்க விடாமல், வெண் திரையும் சின்னத்திரையும் அதே காதலை வைத்து பணம் கொழித்துக் கொண்டிருக்க ... 

இந்த மாதிரி, அங்கெங்கினாதபடி எங்கும் நிறைந்திருக்கும் காதல் பற்றி என் பார்வை - இதோ உங்கள் பார்வைக்கு:

இந்த விசயத்தைப் பற்றி எழுத வேண்டுமென முடிவெடுத்தவுடன்  "என்"னுள் "தோன்றிய" சில கேள்வி-பதில்கள் இவை.
ஏன் ஒரு இளைஞன் / இளைஞி காதல் கொள்கின்றார்?
ஒரு ஈர்ப்பு! 
தான் விரும்பிய மாதிரி உருவம், குணம், நடத்தை, திறமை, வாழ்க்கை-முறை-தரவல்ல-வசதி == இவற்றுள் குறைந்த பட்சம் ஏதேனும் ஒன்றை, எதிர் பாலினத்தைச் சேர்ந்த சக வயதுள்ள ஒருவரிடம் பார்க்கும் பொழுது ஏற்படும் ஒரு இனம் புரியாத ஒரு ஈர்ப்புதான் காரணம். அதே ஒரு ஈர்ப்பு இருவரிடமும் ஏற்படும் பொழுது அது காதல்.
"நாங்கலாம் இதே உலகத்துல தானடா இருக்கோம் .. அதே மூஞ்சியப் பாத்தோம், எங்களுக்கு ஒண்ணும் தோனலையே? உங்களுக்கு மட்டும் எப்புடிறா வருது" என்று ஓலை நீட்டுவோருக்கு - 
நீங்கள் ஆணாக இருக்கும் பட்சத்தில் - உங்கள் சகோதரி/மகள் முதன் முதலில் சேலை கட்டிய பொழுது உங்கள் மனோநிலை என்ன? உங்கள் நினைவுகளைக் கொஞ்சம் பின்னோக்கி ஒட்டுங்கள். - 
நீங்கள் தினம்தோறும் சுடிதாரில் பார்த்த உங்கள் தோழியை முதன் முதலில் சேலை கட்டிய பொழுது உங்கள் மனோநிலை என்ன? ஒரே மாதிரியாகவா இருந்தது? அதுதான் விடை.
நீங்கள் பெண்ணாக இருக்கும் பட்சத்தில் - உங்கள் கணவர் உங்களுக்கே தெரியாமல் ஒரு ஆச்சர்யப்பட வைக்கிற பரிசை வாங்கி வந்து தரும் பொழுது உங்களையும் அறியாமல், உங்கள் உதட்டில் ஒரு புன்னகை "i love you"-வோடு  பூக்கும். அந்த மாதிரி ஒரு விஷயம் திருமணத்திற்கு முன்பே யாரோ ஒரு இளைஞன் மூலம் நடப்பதாக யோசித்துப் பாருங்கள். அதுதான் விடை.
தயவு செய்து ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். "நீங்கள் காதலிக்கவில்லை" என்றால், அதற்கு "நீங்கள் காதல் வயப்படவில்லை" என்பதுதான் காரணம். வித்தியாசமா? நீங்கள் இது வரை ஒரு முறை கூட உங்கள் money purse-ஐ தவற விட்டதில்லை என்றால், அதற்கு நீங்கள் முன் ஜாக்கிரதையான ஆள் என்பது பொருள் அல்ல. எந்த பிக் பாக்கெட் ஆசாமியும் உங்களிடத்தில் கை வைக்கவில்லை என்பதுதான் பொருள். வைத்தால் நீங்கள் நிச்சயம் இழப்பீர்கள் - காதலிடம் உங்களையும், பிக் பாக்கெட் ஆசாமியிடம் பொருளையும்.
இன்றைக்கு, இங்கு இருக்கும் காதலர்களுக்கு முக்கியமான பலம் - பொருளாதார சுதந்திரம். அதனால், தங்கள் வாழ்க்கையை தானாகவே அமைத்துக் கொள்வதில் இருக்கும் பொருளாதராத் தடை இல்லை. மேலும், எளிய தொலைத் தொடர்பு என்கிற மிக முக்கியமான காரணம். அதனால், பார்க்காத காதலை அடிக்கடி பார்க்க முடிகிறது!

ஏன் பெற்றோருக்கு காதல் என்றால் ஏன் இப்படி ஒரு பயம்?
உங்கள் வாழ்க்கை மீது ஒரு முன்னெச்சரிக்கை! 
நன்றாக யோசித்துப் பாருங்கள். நீங்கள் மிதிவண்டி பழகிய பிறகும் கூட, உங்கள் பின்னாடியே ஓடி வந்த தகப்பனுக்கு, உங்கள் மிதிவண்டி மீது பயம் அல்ல. நீங்கள் சாலையில் நல்லபடியாகவும் பாதுகாப்பாகவும் ஓட்டி விடுவீர்களா என்கிற எண்ணத்தால், நீங்கள் நல்ல படியாக வர என்ன செய்ய வேண்டும் என்கிற முன்னெச்சரிக்கை. 
நீங்கள் காதலிக்கும் பொழுது, நீங்கள் காதலிக்கிற நபரின் மதம் / சாதி / நிதி நிலை / சமூக அந்தஸ்து / படிப்பு / குடும்ப சூழல் ... இப்படி பல விசயங்களைக் காரணமாகச் சொல்லி உங்கள் காதலை எதிர்த்திருப்பார்கள். ஆனால், நன்கு உற்று நோக்கினால், அந்தக் காதல் திருமணத்தில் முடிந்தால், உன் வாழ்க்கை நிலையற்றுப் போய் விடுமோ என்கிற எண்ணம்தான் முக்கிய+மூல காரணமாக இருப்பதைத் தெரிந்து கொள்ளலாம். 
"அது மட்டுமல்ல. அவர்கள் எங்கள் உறவினர்க்கும், சமுதாயத்திற்கும் போய் பயப்படுகிறார்கள். வாழ்ந்து முடிக்கப் போகிற அவர்களுக்காக, வாழப் போகிற நாங்கள் எதற்காக கஷ்டப் பட வேண்டும்?" என்கிறீர்களா? மிகச் சரியான கேள்வி. ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் - எந்த நல்ல விசயத்துக்கும் உங்கள் உடனிருக்கும் "நண்பர்களுக்கு" ஹோட்டலில் treat வைக்கும் வகையறா நீங்கள். ஆனால், எந்த விசேசத்துக்கும் தன்  வீட்டில் "உறவுகளுக்கு" மணக்க மணக்க சாப்பாடு போட்டு மகிழ்ந்தவர்கள் அவர்கள். 
உங்களுக்கு, மறு சந்திப்பு என்பது facebook post-ல் போடப்படும் message. அவர்களுக்கு நேரடியாக சந்தித்து அடிக்கும் அரட்டை.
மேலும் ஒரு முக்கியமான வியூகம். நீங்கள் IT - ல வேலை செய்ற, ஏதோ ஒரு சாதி/மதம் சேர்ந்த, பையன்/பெண் தேடும் சந்ததி. அவர்கள் தன் சாதியைச் சேர்ந்த தன் தொழில்ல இருக்கிற வரன் தேடுகிற சந்ததி.அப்படிப் பட்டவர்கள் தங்கள் உறவுகளையும் சமூகத்தையும் எப்படி நிராகரிக்க முடியும்?!

ஏன் பல பேருக்கு காதல் மேல் ஒரு வெறுப்பு?
உங்கள் மீது ஒரு அக்கறை! 
உங்கள் நலம் விரும்பி, எடுத்த எடுப்பில் உங்கள் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட வாய்ப்பே இல்லை. காரணம் - உங்கள் மீது ஒரு அன்பு  + உங்கள் வாழ்க்கை மீது ஒரு அக்கறை.
அதையும் தாண்டி இன்னுமொன்று இருக்கிறதென்றால் அது அந்த நபருக்கு ஏற்பட்ட / தெரிந்த வேறு ஏதோ ஒரு காதலின் தவறான விளைவு.

காதல் என்பது என்ன?
இந்த கேள்விக்கான விடை, இதற்கு முன்பு யோசித்த அனைத்து கேள்விகளுக்கும் விடையையும் தரவல்லது!
"காதலுக்கு மரியாதை" படத்தில் கடைசி ரீலில் ஸ்ரீவித்யாவைப் பார்த்து "எங்கம்மா ஏன் இந்த மாதிரி இல்ல?" என்று பொங்கும் இளைஞனில் எத்தனை பேர் அதே படத்தின் அஞ்சாவது ரீலில் வருகிற  நாயகன் மாதிரி நாயகியின் மீது விரல் கூட படாமல் இருக்கிறான்?!
பெற்றோர் காதலைக் கண்டு பயப்படக் காரணம், காதல் எனும் பெயரில் அவர்கள் கடற்கரையில் ஆரம்பித்து, வள்ளுவர் கோட்டம் வழியாக, வண்டலூர் வன விலங்கியல் பூங்கா வரை காண்கின்ற கொடுமைகள்தான்.
"நாங்கள் எங்கள் வாழ்க்கையை எப்படி வேண்டுமானாலும் வாழ்வோம். உங்களுக்கென்ன?" எனக் குரல் உயர்த்துவோற்கு - "இருக்கலாம், ஆனால், அதற்காக அறையில் செய்ய வேண்டியதை அரங்கேற்றம் செய்யக் கூடாது. 

என்னென்ன பிரச்சனை வருகிறது & இதற்கு என்னதான் முடிவு??
பிள்ளைகள் - பெற்றோரிடம்: "எம் புள்ள போய்ட்டா என்ன செய்றது?", "வேற வழி இல்ல", "ஒத்தப் புள்ள வச்சுருக்கோம்", "அவ(ன்) சந்தோசம்தான் எங்க சந்தாசம்" என்று ஏதோ ஒரு வார்த்தை சொல்லி, தங்களுக்குத் தாங்களே சமாதானம் சொல்லிக் கொண்டு, பெற்றோர் காதல் திருமணத்திற்கு சம்மதிக்கின்றனர். ஆனால், பிள்ளைகள் தங்களது பெற்றோர் முழு மனதுடன் சம்மதித்து விட்டதாக தவறாக நினைத்து விடுகின்றனர். இது பெற்றோர் மீது தேவைப் படுகிற கவனத்தின் அளவை சரியாக எடுத்தக் காட்டுவதில்லை.

காதலர்கள் - அவர்களுக்குள்: மனதினை நேசிப்பதையும், காதலுடன் பார்ப்பதையும், பாராட்டுவதையும், மிக முக்கியமாக மன்னிப்பு கேட்க வேண்டியிருந்தால் கூசாமல் கேட்பதையும் திருமணம் எனும் சடங்கு நிப்பாட்டக் கூடாது.

பெற்றோர் - பிள்ளைகளிடம்: பெரும்பாலும், அதிக அளவிலான பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் காதலை நம்பத் தகுந்த ஒன்றாக நினைக்கவே முடிவதில்லை. காரணம், அவர்கள் தங்கள் பிள்ளைகள் எந்த விசயத்திலும்  (சின்ன விஷயத்தயும் கூட) முடிவுகளை தன்னந் தனியாக எடுக்க முடியும் என்றே நம்புவதில்லை. பெற்றோர் அதை மாற்றிக் கொள்ள வேண்டும்.

பெற்றோர்  - அவர்களுக்குள்: "நாங்களே பாத்திருந்தாலும் இப்பிடி ஒரு பொண்ணு/பையன் பாத்திருக்க மாட்டோம்" என்கிற எண்ணம் வந்தவுடன் சொல்லத் தயங்கக் கூடாது - ஈகோவை வீட்டுக்குள் வர விடக் கூடாது.
திருமணத்திற்குப் பிறகு ஏற்படும் எந்த சின்ன விசயத்தையும் - காதல் திருமணத்தில் மிகவும் குறிப்பாக - இரு தலைமுறையிலும், இரு வீட்டார் பக்கத்திலும் - சின்னதாகவே பார்ப்பதில்லை என்பதுதான் கொடுமையின் உச்சம். மனம் விட்டு இரு வீட்டாரும் பேச வேண்டும்.

எவரையும் காயப் படுத்தாமல், காதலைக் காதலாகவே மட்டும் அணுகுவோருக்கு வாழ்த்துக்கள்!

தங்கள் நேரத்திற்கு நன்றி. தங்களின் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்.